மணிப்பூரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: கண்கள், கைகளை கட்டி வாலிபர் கொடூர கொலை
|மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு உளவு பார்த்த சந்தேகத்தில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்று வாலிபரை கொடூர கொலை செய்து உள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து ஓராண்டாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் திக்சாம் பகுதியில் லாம்லைன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அவருடைய கண்கள் கட்டப்பட்டும், கைகள் இரண்டையும் பின்னால் கட்டியும், நெருங்கிய நிலையில் வைத்து அவரை சிலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொடூர கொலைக்கு ஆளான அவருடைய பெயர் ஆர்.கே. பிரித்வி சிங் என தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு படையினருக்கு அவர் உளவு வேலை பார்த்ததற்காக அவருக்கு இந்த தண்டனை தரப்பட்டு உள்ளது என கே.சி.பி. (முன்னணி) என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தெரிவித்து உள்ளது.
இவர் முன்னாளில் பயங்கரவாதியாக செயல்பட்டு வந்துள்ளார். இதன்பின்னர், மற்ற பயங்கரவாதிகளுடன் சேர்ந்து போலீசில் சரணடைந்து உள்ளார். இதன்பின்னரே, அவர் தங்களுடன் சேர்ந்து உளவு வேலையில் ஈடுபட்டு படை வீரர்களுக்கு ரகசிய தகவலை பகிர்ந்து விட்டு, சரணடைந்து உள்ளார் என அந்த குழுவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சூழலில், மிரட்டி, பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டதற்காக காக்சிங் மாவட்டத்தில் தேஜ்பூர் மகா லெய்காய் பகுதியில் இந்த பயங்கரவாத குழுவை சேர்ந்த நிங்தவுஜாம் ஆஷாகுமார் மீதெய் (வயது 33) என்பவரை போலீசார் சமீபத்தில் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.