< Back
தேசிய செய்திகள்
முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை: அவமானம் தாங்காமல் சிறுவன் தற்கொலை
தேசிய செய்திகள்

முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை: அவமானம் தாங்காமல் சிறுவன் தற்கொலை

தினத்தந்தி
|
24 Dec 2024 3:29 PM IST

முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்ததால் அவமானம் தாங்காமல் சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சண்ட் கபீர் நகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளான். பஸ்தி மாவட்டம் கேப்டன்கஞ்ச் கிராமத்தில் உள்ள மாமா வீட்டிற்கு சென்ற அச்சிறுவன் அங்கு வசித்து வந்துள்ளான்.

இதனிடையே, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கடந்த 20ம் தேதி இரவு அச்சிறுவன் கலந்துகொண்டுள்ளான்.

அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து அந்த இளைஞரை சித்ரவதை செய்துள்ளனர். சிறுவனின் முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும், இச்செயலை தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுவன் தனது மாமா மற்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் அந்த இளைஞர்களிடம் சென்று வீடியோவை செல்போனில் இருந்து டெலிட் செய்யும்படி கேட்டுள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள் வீடியோவை டெலிட் செய்ய மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, அந்த இளைஞர்கள் குறித்து சிறுவனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அந்த புகாரை ஏற்றுக்கொள்ள கேப்டன்கஞ்ச் பகுதியில் உள்ள போலீசார் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், முகத்தில் சிறுநீர் கழித்து இளைஞர்கள் சித்ரவதை செய்ததாலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாலும் அவமானம் தாங்காமல் சிறுவன் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணைக்கு மறுத்த கேப்டன்கஞ்ச் பகுதி போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்