கணவரின் நடத்தையில் சந்தேகம்... இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்களா தாலுகா பாகலகுண்டே பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இவரது கணவர் நவீன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ஐஸ்வர்யா, கணவர் நவீனின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நவீன், மனைவியிடம் கூறாமல் தனியாக தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதை அறிந்த ஐஸ்வர்யா, நவீன் வீடு திரும்பியதும் கடந்த ஒரு வாரமாக தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை ஏற்பட்ட தகராறில் கோபம் அடைந்த ஐஸ்வர்யா, படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாகலகுண்டே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன் தர்மஸ்தலாவுக்கு பெண் ஒருவருடன் சென்றதாக கருதி மனமுடைந்து ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.