புல்டோசர் நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
|குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா? என அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி,
உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பெயரில் சமீப காலமாக கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான வீடுகள், கட்டிடங்கள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.
சிறிய குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையின மக்களை குறிவைத்தே நடப்பதாக புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹூசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ கட்டிடத்தையோ எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்றும் கூறிய சுப்ரீம் கோர்ட் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.