< Back
தேசிய செய்திகள்
டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
22 Nov 2024 2:10 PM IST

டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தேசிய தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வேளாண் செழிப்பாக இருக்கிறது. விவசாய ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இந்த கழிவு எரிப்பு மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது. காற்றின் தரம் (AQI) 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்ற காற்று இல்லை. ஆனால் டெல்லியில் மாசு 400ஐ தாண்டியிருக்கிறது.

டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. பனிமூட்டம் போல காற்று மாசு நிலவுவதால், சாலைப்போக்குவரத்து மட்டும் இன்றி விமானப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாணவர்கள் இந்த பிரச்சினையாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. இதனை தானாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லியில் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் ஆன்லைனில் பாடங்களை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த கோரி பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் பள்ளி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்