சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு - சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் ஏ.கமலா சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
அதில், ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும், தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இடைக்கால நிவாரணம் வழங்கினால் அவதூறு கருத்தை கூற மாட்டேன் என சவுக்கு சங்கர் உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இறுதி முடிவை அறிவிக்காமல் இருக்கும் நிலையில், நாங்கள் முடிவெடுப்பது சரியல்ல என்று தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான மற்ற வழக்குகளுக்கு இந்த ஜாமீன் பொருந்தாது என்று தெரிவித்துள்ளனர்.
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரிய மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சவுக்கு சங்கர் மீதான மற்ற வழக்குகளுக்கு இந்த ஜாமீன் பொருந்தாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளதால், அவர் சிறையில் இருந்து வெளிவருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.