< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி - அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

21 நாட்கள் ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி - அரவிந்த் கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
2 Jun 2024 4:41 PM IST

என் மீதான குற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் இன்று மீண்டும் திகார் சிறைக்கு செல்ல உள்ளார்.

திகார் சிறையில் சரணடைய உள்ள நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு முக்கியமில்லை. தேசம் தான் எங்களுக்கு முக்கியம்.21 நாட்களில் ஒரு நிமிடத்தை கூட நான் வீணடிக்கவில்லை. தேர்தல் பிரசாரம் செய்ய ஏதுவாக 21 நாட்கள் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதற்கு நன்றி. என் மீதான குற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நான் மோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்படவில்லை, சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் நேற்று வெளிவந்துள்ளன. இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. அடக்குமுறை அரசுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுங்கள். ஓட்டு எண்ணிக்கையின் போது கடைசி வரை இருந்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து இடைக்கால ஜாமீன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திகார் சிறைக்கு சென்றார் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால். கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமீன் நிறைவு பெற்றது.

திகார் சிறையில் சரணடைவதற்கு முன் காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி மந்திரிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்