< Back
தேசிய செய்திகள்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மறுதேர்வு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மறுதேர்வு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
13 Jun 2024 11:40 AM IST

கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு வருகிற 23-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் எழும்பின.

இந்த நிலையில் நீட் தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று 'பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் அலக் பாண்டே சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுடன் சேர்த்து அப்துல்லா முகமது பைஸ் மற்றும் ஜரிபிதி கார்த்திக் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த நிலையில் நீட் தேர்வு நடைபெற்ற சில மையங்களில் தேர்வு நேரம் குறைவாக வழங்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதையடுத்து கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், கவுன்சிலிங் மற்றும் மாணவர் சேர்க்கையை ஏன் தாமதப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து 1,563 மாணவர்களுக்கு வருகிற 23-ந்தேதி மறுதேர்வு நடைபெறும் என்றும் 30-ந்தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் இந்த மறுதேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் எழுதலாம் என்றும் மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற பழைய மதிப்பெண்ணே தொடரும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்