< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் அடுத்தடுத்து நடவடிக்கை; 9 பயங்கரவாதிகள் கைது
தேசிய செய்திகள்

மணிப்பூரில் அடுத்தடுத்து நடவடிக்கை; 9 பயங்கரவாதிகள் கைது

தினத்தந்தி
|
11 Feb 2025 11:52 AM IST

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி ஆகிய இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், அவ்வப்போது வன்முறை சம்பவம் ஏற்பட்டு பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டது.

எனினும், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டன. இந்த சூழலில் முதல்-மந்திரி பிரேன் சிங் நேற்று பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் தெங்னவுபால் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து படையினர் கடந்த சில நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், கங்லிபாக் கம்யூனிஸ்டு கட்சி (அபுன்பா) என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேரை, இம்பால் மேற்கு மாவட்டத்தின் ரூப்மகால் டேங் பகுதியில் வைத்து படையினர் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் மிரட்டி, பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து, நவீன ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர்.

படையினரின் மற்றொரு நடவடிக்கையில், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி (கொய்ரெங்) என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று தெங்னவுபால் மாவட்டத்தில் எல் மினவ் ரிட்ஜ்லைன் பகுதியில் செயல்பட்டு வந்த கே.சி.பி. (தைபங்கன்பா) என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் இன்று தெரிவித்தனர்.

இதுவரை மொத்தம் 9 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, எல்.எம்.ஜி. ரக துப்பாக்கி, எஸ்.எல்.ஆர். துப்பாக்கி, இன்சாஸ் ரக துப்பாக்கிகள் 2 மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கி போன்ற நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிக்க தயார் நிலையில் உள்ள துப்பாக்கி குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் செய்திகள்