மணிப்பூரில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - இணைய சேவை துண்டிப்பு
|மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்தி இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது.
இதையடுத்து டிரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அசாம் ரைபிள்ஸ் படையினர் டிரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகருக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.
மேலும், வன்முறையை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பரப்பும் நோக்கில் படங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் வெற்று வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற 15-ந்தேதி வரை 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.