ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
|ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விகாஸ் யாதவ் (21 வயது). இவர் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி முதுகலைப் பட்டம் படித்து வந்தார். அவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நீச்சல் வகுப்பில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அவரது நண்பர்கள் சிலர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விகாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விகாஸ் உயிரிழந்ததையடுத்து நேற்று இரவு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் இல்லத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உயிர்காக்கும் காவலர்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பவத்தின் போது பயிற்சியாளர் யாரும் உடன் இல்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் மெத்தனம் மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறினர்.