வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால்... சம்பந்தப்பட்ட நபர்கள் விமானத்தில் செல்ல தடை
|அதிகரித்து வரும் விமான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறன்றன. இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இ-மெயில் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் இந்த மிரட்டல்களை மர்ம நபர்கள் அனுப்பி வருகின்றனர்.
மிரட்டல் வந்ததும் பெரும் அதிர்ச்சியுடன் அந்த விமானங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது எந்தவித மர்மப்பொருளும் கிடைக்காமல், மிரட்டல்கள் வெறும் புரளி என அம்பலமாகிறது. இது அரசுக்கும், விமான நிறுவன அதிகாரிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அந்த விமானங்களில் பயணிக்கும் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகரித்து வரும் இந்த மிரட்டலை தடுக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்தவகையில் மிரட்டல் விடுப்போருக்கு எதிராக பயணத்தடை உள்ளிட்ட பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "வெடிகுண்டு மிரட்டல்கள் புரளியாக இருக்கும் பட்சத்தில், விமான போக்குவரத்து துறை மற்றும் விமான நிறுவனங்கள் பின்பற்றும் கடுமையான நெறிமுறை ஒன்று உள்ளது. இதுபோன்ற மிரட்டல்கள் வரும்போது பதற்றமான சூழலாகிறது. எனவே, நாம் பின்பற்ற வேண்டிய ஒரு சர்வதேச நடைமுறை உள்ளது. தொடரும் மிரட்டல்களை கட்டுப்படுத்த விமானப்போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யவும், சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டம் 1982-ல் திருத்தங்களை மேற்கொள்ளவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மிரட்டல்கள் வர தொடங்கியதில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டன. விமான (பாதுகாப்பு) விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கும் நபர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர்கள் இனி விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும்" என்று ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் சிவில் விமானப்போக்குவரத்து அமைப்பு தொடர்ந்து பேசி வருவதாக கூறிய ராம்மோகன் நாயுடு, இந்த மிரட்டல்களின் பின்னணியில் சதி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.