மாநில கட்சி அங்கீகாரம்; கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற வி.சி.க. தலைவர் திருமாவளவன்
|மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் வாழ்த்து பெற்றார்.
சென்னை,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந்தேதி எண்ணப்பட்ட நிலையில், போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலமாக வி.சி.க.வின் 25 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவன், வி.சி.க. பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் வி.சி.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ததற்காக கமல்ஹாசனுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.