வக்பு விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு: கிறிஸ்தவ அமைப்புகளுக்கு கிறிஸ்தவ எம்.பி.க்கள் வேண்டுகோள்
|வக்பு விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த கிறிஸ்தவ எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டெல்லி,
இஸ்லாமியர்கள் தங்கள் சொத்துக்களை மசூதிகள், தர்காக்கள், மதராசாக்களுக்கு தானமாக வழங்கும் வழக்கம் உள்ளது. இந்த சொத்துக்கள் வக்பு சொத்துக்கள் என அழைக்கப்படுகிறது. அசையும், அசையாக இந்த சொத்துக்களை பராமரிக்க வக்பு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
வக்பு வாரியத்திற்கு என்று தனி சட்டங்கள் உள்ளன. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வக்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதோரையும் சேர்ப்பது உள்பட 40 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளை, வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கிறிஸ்தவ மதத்தின் இந்திய கத்தோலிக்க பேராயர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, இந்த மாநாட்டில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த கிறிஸ்தவ எம்.பி.க்கள் 20 பேர் பங்கேற்றனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹிபி இடன், டீன் குரியகொஷி, அண்டோ அண்டனி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். பாஜக எம்.பி.யும் , அமைச்சருமான ஜார்ஜ் குரியனும் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்த கிறிஸ்தவ எம்.பி.க்கள், வக்பு விவகாரத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.