பீகாரின் புகழ்பெற்ற மகாபோதி கோயிலில் இலங்கை அதிபர் திசநாயக தரிசனம்
|கோயில் வளாகத்தில் புத்தர் தொடர்புடைய பல இடங்களையும் திசநாயக பார்வையிட்டார்.
பாட்னா,
இலங்கையின் அதிபராக அநுர குமார திசநாயக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள போத்கயாவுக்கு சென்றார். அங்கு, புத்தரின் புனித தலங்களில் ஒன்றான மகாபோதி கோயிலில் பிரார்த்தனை செய்தார். மேலும், கோயில் வளாகத்தில் புத்தர் தொடர்புடைய பல இடங்களையும் அவர் பார்வையிட்டார். இலங்கை அதிபரின் வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மகாபோதி கோயில் புத்த மதத்தின் புனித தலங்களில் ஒன்றாகும். இது போத்கயாவில் (மத்திய பீகார் மாநிலம், வடகிழக்கு இந்தியாவில்) அமைந்துள்ளது. இங்குதான் புத்தர் ஞானம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளம் என்பது குறிப்பிடத்தக்கது.