மேற்கு வங்காள இடைத்தேர்தலில் ஆங்காங்கே வன்முறை; திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பலி
|வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிதாய், மதாரிகத், ஹரோவா, மெதினிபூர், நைஹாட்டி மற்றும் தல்தங்கரா ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட உள்ளன.
இந்த இடைத்தேர்தலில், சி.பி.ஐ. (எம்) தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் 2021-க்கு பிறகு முதல் முறையாக தனித்தனியாக போட்டியிடுகின்றன. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 45 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று காலை முதல், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு இதுவரை 41 புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக ஹரோவா, மதாரிகத், சிதாய் மற்றும் தல்தங்கரா ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மிரட்டுவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நைஹாட்டி தொகுதிக்கு உட்பட்ட பட்பரா பகுதியில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் அசோக் ஷா என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.