< Back
தேசிய செய்திகள்
வங்காளதேசத்தில் ஆன்மிக தலைவர் கைது; கொல்கத்தாவில் இஸ்கான் அமைப்பினர் 2-வது நாளாக போராட்டம்

Image Courtesy : PTI

தேசிய செய்திகள்

வங்காளதேசத்தில் ஆன்மிக தலைவர் கைது; கொல்கத்தாவில் 'இஸ்கான்' அமைப்பினர் 2-வது நாளாக போராட்டம்

தினத்தந்தி
|
29 Nov 2024 7:25 PM IST

வங்காளதேசத்தில் ஆன்மிக தலைவர் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தாவில் 'இஸ்கான்' அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தா,

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, அந்நாட்டில் உள்ள இந்து மத அமைப்பின் ஆன்மிக தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து வங்காளதேசத்தில் உள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்காளதேசத்தில் இந்து மத அமைப்பின் தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலையளிப்பதாகவும், அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆன்மிக தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் மீதான கைது நடவடிக்கைக்கு வங்காளதேச அரசை கண்டிக்கும் விதமாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் 'இஸ்கான்' அமைப்பினர் 2-வது நாளாக இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இந்துக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்தார்.

வங்காளதேசத்தில் மொத்தம் உள்ள 17 கோடி மக்கள் தொகையில், 8 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். அங்கு கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி பிரதமர் பதவியை ஷேக் ஹசினா ராஜினாமா செய்ததை தொடர்ந்து வங்காளதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்ற பின்னர் அங்குள்ள சிறுபான்மை மக்கள் மீது 200-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்