காட்டு வழிப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு... சபரிமலையில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
|இதுவரை 1 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் காட்டு வழிகளில் தரிசனத்திற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை,
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உலகப் புகழ் வாய்ந்ததாகும். கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டு சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நவம்பர் 15-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது.
மகரவிளக்கு, மண்டல பூஜை சீசன்களில் அய்யப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். அய்யப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
இந்தசூழலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிப்பதற்காக சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதற்காக சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே சபரிமலையில் நவம்பர் 16-ம் முதல் டிசம்பர் 14-ம் தேதி வரையிலான கடந்த 29 நாட்களில் ரூ. 163.89 கோடி வசூலாகி உள்ளது என்றும், 22.67 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4,51,043 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காட்டு வழிப்பாதையில் வரும் பக்தர்களுக்கு, சபரிமலையில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடப்பு சீசனையொட்டி வண்டிப்பெரியார்-சத்ரம் புல்மேடு வழியாகவும், எருமேலி வழியாகவும் சபரிமலைக்கு பாரம்பரிய காட்டு வழிப்பாதையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மழை குறைந்து உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் இந்த காட்டு வழிகளில் தரிசனத்திற்கு வந்துள்ளனர்.
நடை பயணமாக வரும் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு வனத்துறையினர் சார்பில் அடையாள காப்பு வழங்கப்படும். அவ்வாறு அடையாள காப்புடன் சன்னிதானம் வரும் அய்யப்ப பக்தர்களுக்கு தனி வரிசையில் தரிசனத்திற்கு வசதி செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
முன்னதாக அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து வரும் 22-ம் தேதி காலை 6 மணிக்குப் புறப்பட்டு டிசம்பர் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், அய்யப்பனுக்கான தீபாராதனை நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்றும் கற்பூர ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் பிரசாந்த் தெரிவித்திருந்தார்.