திருமண நாளில் பெற்றோரை தீர்த்து கட்டி விட்டு போலீசில் பொய் புகாரளித்த மகன்; டெல்லியில் கொடூரம்
|டெல்லியில் 3 பேர் படுகொலையில், மகனே திட்டமிட்டு இதனை செய்ததும் போலீசில் பொய் புகாரளித்ததும் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் நேப் சராய் பகுதியில் தியோலி கிராமத்தில் கணவர், மனைவி மற்றும் மகள் என 3 பேர் வீட்டின் படுக்கையறையில் இன்று காலை கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுபற்றி அந்த தம்பதியின் மகன் அர்ஜுன் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் இணை ஆணையாளர் எஸ்.கே. ஜெயின் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், திருட்டு அல்லது அத்துமீறி உள்ளே நுழைந்ததற்கான எந்த தடயமும் காணப்படவில்லை. இது கொள்ளை சம்பவத்திற்கான வழக்கு இல்லை என தெளிவாக தெரிந்தது.
அர்ஜுனிடம் விசாரித்தபோது நிறைய முரண்பாடான விசயங்கள் தெரிய வந்தன. அவருடைய கையில் புதிதாக காயம் காணப்பட்டது. போலீசார் விசாரித்ததில், குற்றத்தில் ஈடுபட்ட விசயங்களை அவர் ஒப்பு கொண்டார். போலீசில் பொய்யாக அவர் புகாரளித்ததும் தெரிய வந்துள்ளது. அர்ஜுனுக்கு, அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினருடனான உறவானது நல்ல முறையில் இல்லை.
அவருடைய தந்தை அடிக்கடி திட்டியதில் மனமுடைந்து போயிருக்கிறார். இது அவரை கொலை செய்வதற்கு தூண்டியுள்ளது. 2-வது விசயம் சகோதரியுடன் மோதல் போக்கில் இருந்து வந்துள்ளார். டிசம்பர் 4-ந்தேதி அர்ஜுனின் பெற்றோருக்கு திருமண நாள் ஆகும். அந்த நாளில் கொலையை செய்வதற்கு அவர் முடிவு செய்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து 3 பேரையும் வீட்டில் அதிகாலையில், ஆத்திரம் தீர படுகொலை செய்திருக்கிறார். அர்ஜுனின் தந்தை முன்னாள் ராணுவ அதிகாரியாவார். ராணுவ கத்தியை பயன்படுத்தி இந்த சம்பவத்தில் அர்ஜுன் ஈடுபட்டு இருக்கிறார். சம்பவம் நடந்தபோது, நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்தேன் என அண்டை வீட்டுக்காரர்களிடம் கூறியிருக்கிறார். போலீசாரிடமும் இதனையே கூறியுள்ளார். எனினும், தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.