மலக்குடலில் 1 கிலோ தங்கம் கடத்தல்: விமான பணிப்பெண் கைது
|விமானப் பணிப்பெண் ஒருவர் 1 கிலோ தங்கத்தை மலக்குடலில் கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர்,
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூருக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண் சுமார் 1 கிலோ தங்கத்தை மலக்குடலில் கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 28-ம் தேதி கண்ணூர் வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த விமானத்தில் கொல்கொத்தாவைச் சேர்ந்த சுரபி காதூன் என்ற விமானப் பணிப்பெண் பணியில் இருந்தார். சந்தேகத்தின் பேரில் சுரபு காதூனையும் வருவாய் புலனாய்வு இயக்குனரக பணியாளர்கள் சோதனை செய்தனர்.
அப்போது, அவர் தனது மலக்குடலில் 960 கிராம் தங்கத்தை கலவை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை அடுத்து கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் விமான நிறுவன ஊழியர் ஒருவர் மலக்குடலில் தங்கம் கடத்தி வந்து, கைதாகி உள்ளது இதுவே முதல் முறை.