< Back
தேசிய செய்திகள்
டெல்லியை சூழ்ந்த புகைமூட்டம்; மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
தேசிய செய்திகள்

டெல்லியை சூழ்ந்த புகைமூட்டம்; மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்

தினத்தந்தி
|
5 Nov 2024 11:58 AM IST

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகள் புகைமூட்டமாக காணப்படுகின்றன. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. இதன்படி டெல்லியில் பட்டாசு விற்பனை செய்யவோ அல்லது சேமித்து வைக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் தீபாவளி பண்டிகை அன்று டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருந்தது.

பட்டாசு வெடிப்பதற்கான தடையை டெல்லி அரசு சரியாக அமல்படுத்தவில்லை என சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 8 மணியளவில் காற்று தரக் குறியீடு 384 ஆக பதிவாகி உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(CPCB) தெரிவித்துள்ளது. அதே சமயம் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு(SAFAR) வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று தரக் குறியீடு 400-க்கும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது, 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது, 401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.

மேலும் செய்திகள்