< Back
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தலில் நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும் - தொகுதி பங்கீடு குறித்து சரத் பவார்
தேசிய செய்திகள்

'சட்டசபை தேர்தலில் நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும்' - தொகுதி பங்கீடு குறித்து சரத் பவார்

தினத்தந்தி
|
22 Jun 2024 11:15 AM IST

தொகுதி பங்கீடு விவகாரத்தில் சட்டசபை தேர்தலின் கள நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பிரிந்து சென்றதால் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டது. பின்னர் பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி ஆனார். அதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றதால் அக்கட்சி இரண்டாக உடைந்தது.

இதனிடையே சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 'மகாவிகாஸ் அகாடி' என்ற கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொண்டன. இந்த கூட்டணி மராட்டிய மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதன்படி மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) 9 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதே சமயம் பா.ஜ.க. 9 தொகுதிகளிலும், சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி) 7 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி, கூட்டணி கட்சிகளை விட குறைந்த இடங்களிலேயே போட்டியிட்டது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும் என சரத் பவார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் சரத் பவார் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி நிலைத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் மராட்டிய மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் என்றும், தொகுதி பங்கீடு விவகாரத்தில் சட்டசபை தேர்தலின் கள நிலவரம் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்