< Back
தேசிய செய்திகள்
சீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்
தேசிய செய்திகள்

சீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்

தினத்தந்தி
|
12 Sept 2024 5:03 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

*சீதாராம் யெச்சூரி மறைவு செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது. பழம்பெரும் அரசியல்வாதியான சீதாராம் யெச்சூரியை நான் நீண்ட காலம் அறிவேன். அவரது மறைவு தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பாகும்- மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி

*சீதாராம் யெச்சூரி எனக்கு நல்ல நண்பராக இருந்தார். நமது நாட்டை ஆழமாக புரிந்து கொண்டவராகவும் தேசத்தின் சிந்தனையை பாதுகாப்பவராகவும் விளங்கினார். அவருடன் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழந்துள்ளேன். சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்த துயரமான தருணத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

*சீதாராம் யெச்சூரி மறைவு அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. இடதுசாரி இயக்கத்தின் தீவிர வீரரும் இந்திய அரசியலில் மிகச்சிறந்த ஆளுமையாகவும் இருந்தவர் சீதாராம் யெச்சூரி- தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

*சீதாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

*சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியில் அக்கறை கொண்டவர். யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் - ராமதாஸ்

*தோழர் சீதாராம் யெச்சூரி இன்று காலமானார் என்ற துயரச் செய்தி பேரிடியாக வந்தது. மாணவப் பருவத்தில் தொடங்கி, இறுதி மூச்சுவரை இடைவிடாது பணியாற்றிய தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது - முத்தரசன்

மேலும் செய்திகள்