ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் என்ன? நாடாளுமன்ற கூட்டுக் குழு முதல் கூட்டத்தில் அதிகாரிகள் விளக்கம்
|பா.ஜ.க. உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை மந்திரியுமான பி.பி. சவுத்ரி, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
மக்களவை தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசியலமைப்பு (129-வது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய இரண்டு சட்ட மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் மக்களவையின் ஒப்புதலோடு இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக, பா.ஜ.க. உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை மந்திரியுமான பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டுக்குழு உறுப்பினர்களுடன், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்மொழியப்பட்ட சட்டங்களின் விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு சட்டத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.