நிழலுலக தாதா சோட்டா ஷகீலின் உறவினர் மரணம்
|மராட்டியத்தின் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆரிப் ஷேக் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
புனே,
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாட்டில் வசித்து வருகிறார். தாவூத் இப்ராகிம், அவருடைய நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் சர்வதேச அளவில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்றை இயக்கி வருகின்றனர்.
டி-நிறுவனம் என்ற பெயரில் இந்தியாவில் அந்நிறுவனம் பல்வேறு பயங்கரவாத மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), தாவூத் இப்ராகிம், கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் கைது செய்யப்பட்ட 3 கூட்டாளிகள் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த 3 கூட்டாளிகள் ஆரிப் அபுபக்கர் ஷேக், ஷபீர் அபுபக்கர் ஷேக் மற்றும் முகமது சலீம் குரேஷி ஆவர். இவர்கள் அனைவரும் பல்வேறு வகையான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று அதுபற்றிய விசாரணையில் என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.
அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் அதற்கான சான்றுகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது. இதில், ஆரிப் ஷேக் என்ற ஆரிப் பைஜான், கைது செய்யப்பட்டு ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சோட்டா ஷகீலின் உறவினர் ஆவார்.
இந்நிலையில், ஆரிப் ஷேக்கிற்கு சிறையில் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் நேற்று மாலை அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.