பலாத்காரம் எதிரொலி; காவல் உயரதிகாரியின் பிஎச்.டி. படிப்பை ரத்து செய்து கான்பூர் ஐ.ஐ.டி. நடவடிக்கை
|உத்தர பிரதேசத்தில் கான்பூர் ஐ.ஐ.டி.யில் பிஎச்.டி. படித்த உதவி காவல் ஆணையாளருக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கான்பூர்,
உத்தர பிரதேசத்தில் கான்பூர் நகரில் உள்ள ஐ.ஐ.டி.யில் பிஎச்.டி. படித்து வந்த உதவி காவல் ஆணையாளர் பதவி வகித்த ஒருவர் மீது அதே கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து வரும் 26 வயது பிஎச்.டி. மாணவி பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், இணைய குற்றம் தொடர்பான பிஎச்.டி. படிப்பில் முகமது மொஹ்சின் கான் சேர்ந்துள்ளார். படிக்கும்போதே, மாணவியுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்திருக்கிறார். அதன்பின்னர், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவருக்கு எதிராக கடந்த 24-ந்தேதி மாணவி பலாத்கார புகார் அளித்ததும், முகமது கான் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின்னர், காவல் துறையிடம் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையில், அவருடைய படிப்பு ரத்து செய்யப்பட்டது. டி.ஜி.பி. அலுவலக பரிந்துரையின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனை கான்பூர் ஐ.ஐ.டி.யின் இயக்குநர் மணீந்திரா அகர்வால் உறுதி செய்துள்ளார். மாணவி அளித்த புகாரில், கான் அவரை மிரட்டியுள்ளார். சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு விடுவேன் என அச்சுறுத்தியும் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.