மும்பையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
|மும்பையில் இரவு நேரத்தில் பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு பனியின் தாக்கம் உள்ளது.
மும்பை,
மும்பையில் நவம்பர் மாத கடைசியில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் டிசம்பர் மாத முதல்வாரத்தில் குளிரின் தாக்கம் குறைந்து இருந்தது. குறிப்பாக கடந்த புதன்கிழமை நகரில் 99 டிகிரி வெயில் கொளுத்தியது. இது 2008-க்கு பிறகு டிசம்பரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.பெஞ்சல் புயல் காரணமாக மும்பையில் குளிரின் தாக்கம் குறைந்து, வெப்பநிலை அதிகரித்ததாக கூறப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மும்பையில் மீண்டும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக காலை, இரவு நேரத்தில் பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு பனியின் தாக்கம் உள்ளது.
இதில் நேற்று முன்தினம் மும்பையில் குறைந்தபட்ச வெப்பநிலை 56.66 டிகிரியாக குறைந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் டிசம்பரில் 52.52 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதன்பிறகு 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் டிசம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. நேற்றும் மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட பெருநகரப்பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. வரும் வெள்ளிக்கிழமை வரை மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.