< Back
தேசிய செய்திகள்
தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது
தேசிய செய்திகள்

தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது

தினத்தந்தி
|
23 Dec 2024 7:40 PM IST

மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளரான ராவ் கைது செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது.

கான்கர்:

சத்தீஷ்கார் மாநிலத்தில் காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மூத்த தலைவர் பிரபாகர் ராவ் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) அமைப்பின் தண்டகாரண்ய சிறப்பு மண்டல கமிட்டி உறுப்பினரான பிரபாகர்ராவ் என்ற பால்முரி நாராயண் ராவ், நேற்று கான்கர் மாவட்டம் அன்டகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிடிபட்டார்.

இதுகுறித்து காவல்துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறியதாவது:-

57 வயது நிரம்பிய பிரபாகர் ராவ், மாவோயிஸ்ட் அமைப்பிற்கான ஆயுதங்கள் விநியோக பொறுப்பாளராக செயல்பட்டார். மாவோயிஸ்டு உயர்மட்ட நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததார். பிரபாகர் ராவின் தலைக்கு ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் வடக்கு பஸ்தார் துணை மண்டல பிரிவைச் சேர்ந்த மூத்த நிர்வாகி பிரபாகர் ராவின் செயல்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாதுகாப்புப் படையினர் நேற்று (ஞாயிறு) அன்டகர் காவல் நிலையப் பகுதியில் பிரபாகர் ராவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வடக்கு பஸ்தார் பகுதியில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளரான ராவ் கைது செய்யப்பட்டிருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி ஆகும்.

பிரபாகர் ராவ் மீது சத்தீஸ்கார் உட்பட பல மாநிலங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கார் ஆகிய மாநிலங்களின் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்