புதுச்சேரியில் பச்சை நிறமாக மாறிய கடல் நீர்
|புதுச்சேரியில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியது.
புதுச்சேரி,
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், தமிழகம், புதுவையில் மழை பெய்தது. இதனால் கடலில் சுமார் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்று மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. கடல் அலையின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மேல் புதுச்சேரி கடலின் அலை பச்சை நிறத்தில் மாறத் தொடங்கியது. அப்போது லேசான துர்நாற்றம் வீசியது. புதுவைக்கு வந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிலர் கடலில் குளித்து கொண்டு இருந்தனர். கடல்நீர் மாறத் தொடங்கிய சிறிது நேரத்தில் குளித்துக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு உடலில் லேசான அரிப்பு எடுத்தது. உடனே அவர்கள் கரைக்கு திரும்பினர். இதனை பார்த்த பொதுமக்கள் பீதியால் கடலுக்குள் இறங்கவில்லை.
அதே வேளையில் கடல்நீர் பச்சையாக மாறிய தகவல் அறிந்து ஏராளமானவர்கள் கடற்கரைக்கு வந்து கடல் அலையை வேடிக்கை பார்க்க தொடங்கினர். மாலை வரை இதேநிலையே நீடித்தது. இதற்கிடையே நேற்று மாலை தலைமை செயலகத்தில் இருந்து காந்தி சிலை வரை ஏராளமான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கின.
இது பற்றிய தகவல் அறிந்த கடல்வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசியர்கள் கடற்கரைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கடல் நீரை சேகரித்து சென்றுள்ளனர். இதே போல் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் கடல் நீரை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். சேகரிக்கப்பட்ட நீரை ஆய்வு செய்த பின்னரே எதுவும் சொல்ல முடியும் என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.