< Back
தேசிய செய்திகள்
மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
5 Dec 2024 2:05 PM IST

மத்திய மந்திரி எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பஞ்சமி நிலம் குறித்து பேசிய விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை மந்திரி எல்.முருகன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது எல்.முருகன் சார்பில் மூத்த வக்கீல் கே.பரமேஷ்வர் ஆஜராகி, 'மனுதாரர் பட்டியலின ஆணையத்தின் துணை தலைவராக இருந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக புகார் கிடைக்கப்பெற்றது. அப்போது நடந்தவற்றை அரசியல் ரீதியான சொல்லாடலாகவும், கேள்வியாகவும் மட்டுமே அவரது பேச்சு அமைந்திருந்தது' என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரும் அரசியல் கட்சிகளில் முக்கிய நபர்களாக' உள்ளதை குறிப்பிட்டனர். முரசொலி அறக்கட்டளை டிரஸ்டி ஆர்.எஸ்.பாரதியின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா, 'இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை டிரஸ்டி ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் கேட்டு நாளை (அதாவது இன்று) தெரிவிப்பதாகவும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்' என்றும் கோரினார்.

இதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் வழக்காக விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கமோ, நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கமோ இல்லை என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து வழக்கை தொடரும் எண்ணம் இல்லை என அறக்கட்டளை தரப்பு கூறியதால் வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்