அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக சிறுபான்மை அந்தஸ்து: 1967-ல் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு
|பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான விவகாரத்தை புதிய அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான சட்டப்போராட்டம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக, சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
வழக்கு விவரம்:
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமானது மத்திய பல்கலைக்கழகமாக இருப்பதால், அதை சிறுபான்மை நிறுவனமாக கருத முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 1967-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. அஜீஸ் பாஷா மற்றும் மத்திய அரசுக்கிடையிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும், 1981-ம் ஆண்டில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்தை பெற்றது.
அதன்பின்னர், சிறுபான்மை அந்தஸ்துக்கான பாராளுமன்ற சட்டத் திருத்தத்தை அலகாபாத் ஐகோர்ட்டு 2006-ல் ரத்து செய்ததால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியது. தீர்ப்பை எதிர்த்து அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேல்முறையீடு செய்தது. பல்கலைக்கழகம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், 2016-ல் மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. 2019-ல் இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமானது மத்திய பல்கலைக்கழகமாக இருப்பதால், அதை சிறுபான்மை நிறுவனமாக கருத முடியாது என்று 1967-ல் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. மேலும், பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான விவகாரத்தை புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தது.
அலகாபாத் ஐகோர்ட்டு 2006-ல் அளித்த தீர்ப்பு செல்லுபடியாகுமா? என்பதை முடிவு செய்ய புதிய அமர்வு அமைக்கப்படவேண்டும் என்றும், இதற்காக வழக்கு தொடர்பான நீதிமன்ற பதிவுகள் மற்றும் ஆவணங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.
பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான விவகாரம் சுப்ரீம் கோர்ட்டால் நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். எனவே, பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய மற்றொரு அமர்வுக்கு அனுப்புகிறோம் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
4:3 என்ற பெரும்பான்மையுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 7 நீதிபதிகளில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சஞ்சீவ் கன்னா, ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 4 பேர் இந்த தீர்ப்பை கூறி உள்ளனர். மற்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.