'சாவர்க்கர், பால் தாக்கரேவை புகழ்ந்து பேச முடியுமா?' - ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால்
|ராகுல் காந்தியால் சாவர்க்கர், பால் தாக்கரே ஆகியோரை புகழ்ந்து பேச முடியுமா? என அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பஸ்சில் இலவச பயணம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தியால் சாவர்க்கர், பால் தாக்கரே ஆகியோரை புகழ்ந்து பேச முடியுமா? என அமித்ஷா சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது;-
"மகாவிகாஸ் அகாடி கூட்டணி என்பது பொய் சொல்பவர்களின் படையாக உள்ளது. ராகுல் காந்தி தனது நண்பர் உத்தவ் தாக்கரேவின் தந்தை பால் தாக்கரேவைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உத்தவ் தாக்கரேவுக்கு தைரியம் இருந்தால் ராகுல் காந்தியிடம் இதை கேட்கட்டும். ராகுல் காந்தியால் சாவர்க்கர், பால் தாக்கரே ஆகியோரை புகழ்ந்து பேச முடியுமா?
மராட்டிய சட்டமன்ற தேர்தல் மூலம் இந்த மாநில மக்கள் சத்ரபதி சிவாஜி மற்றும் சாவர்க்கரின் பாதையை தேர்ந்தெடுக்கிறார்களா? அல்லது அவுரங்கசீப்பின் பாதையை தேர்ந்தெடுக்கிறார்களா? என்பது தெரிந்துவிடும். மாகாயுதி கூட்டணி சந்தேகமின்றி சத்ரபதி சிவாஜி மற்றும் சாவர்க்கரின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் மகாவிகாஸ் அகாடி கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அவுரங்கசீப்பின் ரசிகர்கள் போல் தெரிகிறது.
ராகுல் காந்தி என்ற விமானத்தை தரையிறக்குவதற்கு சோனியா காந்தி 20 முறை முயன்றுவிட்டார். ஆனால் 20 முறையும் அந்த விமானம் விபத்திற்குள்ளாகிவிட்டது. தற்போது 21-வது முறையாக அந்த விமானத்தை மராட்டிய மாநிலத்தில் தரையிறக்க சோனியா காந்தி முயற்சித்து வருகிறார். இந்த முறையும் மராட்டிய தேர்தலில் அந்த விமானம் தோல்வியை சந்திக்கும்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.