< Back
தேசிய செய்திகள்
மராட்டிய மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி. நியமனம்
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி. நியமனம்

தினத்தந்தி
|
5 Nov 2024 4:56 PM IST

மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

தேர்தலில் பா.ஜனதா - காங்கிரஸ், சிவசேனா - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. மகாயுதி கூட்டணியில் பா.ஜனதாவும், மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரசும் அதிக தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அந்தவகையில் மொத்தம் உள்ள 288 இடங்களில் இந்த 2 கட்சிகளும் 74 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து அம்மாநில டி.ஜி.பி. ரஷ்மி சுக்லாவை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அம்மாநில அரசுக்கு நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர் இன்று மாலை 5 மணிக்குள் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சஞ்சய் குமார் வர்மா 1990ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர் ஆவார். இவர் சட்டம் மற்றும் தொழில்நுட்பத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தவராவார். மேலும் இவர் ஏப்ரல் 2028இல் ஓய்வு பெற உள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்