
'சனாதன தர்மம் நமது தேசிய மதம்' - யோகி ஆதித்யநாத்

சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதுவரை சுமார் 11.5 கோடி பேர் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது என்றும், சனாதன தர்மம் நமது தேசிய மதம் என்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-
"சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது.
ஒற்றுமையின் செய்தியை மகா கும்பமேளா கொடுக்கிறது. அங்கு பாகுபாடு காட்டப்படுவதில்லை. சனாதன தர்மத்தை விமர்சித்தவர்கள், கும்பமேளாவை பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறோம். திருதராஷ்டிரனைப் போல் இருக்காமல், இங்கு வந்து நேரில் பாருங்கள்.
பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு சாதி அல்லது மதத்திற்கு உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது."
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.