< Back
தேசிய செய்திகள்
செங்கோலை மாற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி: செம்மையான ஆட்சிக்கு அடையாளமே செங்கோல் - பா.ஜனதா விளக்கம்
தேசிய செய்திகள்

செங்கோலை மாற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி: 'செம்மையான ஆட்சிக்கு அடையாளமே செங்கோல்' - பா.ஜனதா விளக்கம்

தினத்தந்தி
|
27 Jun 2024 2:52 PM IST

மக்களவையில் செங்கோலை மாற்றக் கோரிய சமாஜ்வாதி எம்.பி.யின் கடிதத்துக்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி சபாநாயகருக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. செங்கோல் முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் இந்த கடிதத்திற்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், "செம்மையான ஆட்சிக்கு அடையாளமே செங்கோல். நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மற்றும் தமிழக கலாசாரத்தை சமாஜ்வாதி எம்.பி. அவமதித்துவிட்டார். செங்கோல் மன்னர் ஆட்சியின் அடையாளம் என்றால், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களிடமிருந்து நேரு, ஏன் அதனைப் பெற்றுக்கொண்டார்..? மன்னர் ஆட்சியின் அடையாளத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் செங்கோலை இழிவுபடுத்துவதை திமுக ஆதரிக்கிறதா, அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். கேள்வி என்னவென்றால், பல தசாப்தங்களாக செங்கோலை வாக்கிங் ஸ்டிக்காக குறைக்கும் மனநிலை மீண்டும் சமாஜ்வாடி கட்சியின் வடிவத்தில் வந்துள்ளது. அவர்கள் இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை. அவர்கள் மீண்டும் செங்கோலை இழிவுபடுத்துகிறார்கள், இது குறித்து தி.மு.க. ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் அளித்த விளக்கத்தில், "எங்கள் எம்.பி. இவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்னவென்றால், மக்களவையில் செங்கோல் நிறுவப்பட்டபோது, பிரதமர் அதனை வணங்கினார். ஆனால், பதவியேற்றபோது அதனை மறந்துவிட்டார், எப்போது பிரதமர் அதனை வணங்க மறந்துவிட்டாரோ, அப்போதே அவர் வேறு ஒன்று தேவைப்படுவதாகக் கருதுகிறார் என்று சவுத்ரி கூறியுள்ளார். ஒருவேளை எங்கள் எம்.பி.யின் கருத்து அவருக்கு அதை நினைவூட்டுவதாக இருக்கலாம்" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் செய்திகள்