சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு
|மும்பையில் சல்மான்கான் ஷூட்டிங் தளத்தில், ஒருவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். பாலிவுட் உலகின் டாப் ஸ்டாராக இருக்கும் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால், அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அதிகாலை சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்தும் பல்வேறு முறை சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில், ஒருவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஊழியர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது சல்மான் கான் ரசிகர் எனவும் அவரை பார்க்க வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஊழியர்கள் அவர்களை விட மறுத்ததால், லாரன்ஸ் பிஷ்னோயிடம் நான் சொல்லட்டுமா? என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஷிவாஜி பார்க் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், படப்பிடிப்பு தளத்தில் அத்து மீறி நுழைந்த நபரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.