< Back
தேசிய செய்திகள்
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது:  சத்தீஷ்கர் ரெயில் நிலையத்தில் பிடிபட்டார்
தேசிய செய்திகள்

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது: சத்தீஷ்கர் ரெயில் நிலையத்தில் பிடிபட்டார்

தினத்தந்தி
|
18 Jan 2025 11:57 PM IST

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கில் தேடப்பட்ட நபரை சத்தீஷ்கரில் போலீஸார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் கடைசி 4 தளத்தில் நடிகர் சயீப் அலிகான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு வழக்கம் போல அவர் மற்றும் குடும்பத்தினர் தூங்க சென்றனர். அப்போது சயீப் அலிகானின் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவரை பிடிக்க சயீப் அலி கான் முயன்ற போது அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஒடினார்.கத்தியால் குத்தப்பட்டதில், காயம் அடைந்த சயீப் அலி கானை அருகில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளார்.

இந்தநிலையில் சயீப் அலிகான் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். இதற்காக 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் துப்பு துலங்கியது. நடிகரை தாக்கிய நபர் மும்பையில் இருந்து ரெயில் மூலம் தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மும்பை போலீசார் பிற மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்

மும்பை போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சத்தீஷ்கார் மாநில ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சயீப் அலிகானை தாக்கியவரை ரெயில்களில் தேடி வந்தனர். இதில் நேற்று மதியம் அந்த மாநிலத்தின் துர்க் ரெயில் நிலையத்துக்கு மும்பையில் இருந்து வந்த சாலிமார் ஞானேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் பொதுப்பெட்டியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏறி சோதனை நடத்தினர். அப்போது சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவரை போன்ற தோற்றம் உடைய வாலிபர் ஒருவர் இருந்தார்.

உடனடியாக அவரை சுற்றிவளைத்து பிடித்த போலீசார், பிடித்த போலீசார், பிடிபட்ட வாலிபரை வீடியோ கால் மூலம் மும்பை போலீசாருக்கு காண்பித்தனர். அப்போது மும்பை போலீசார் அவர் தான் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து துர்க் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில் அவரது பெயர் ஆகாஷ் கனோஜியா (வயது 31) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சத்தீஷ்கார் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிடிபட்டவர் மும்பை கொலாபா பகுதியை சேர்ந்தவர் என எங்களிடம் கூறியுள்ளார். அவர் தான் சயீப் அலிகானை தாக்கியவர் என்பதை மும்பை போலீசார் இங்கு வந்தவுடன் நேரில் உறுதி செய்வார்கள்" என்றார்.இதற்கிடையே பிடிபட்ட வாலிபரை அழைத்து வந்து விசாரணை நடத்த மும்பை போலீசார் சத்தீஷ்கார் விரைந்து உள்ளனர். விசாரணை முடிவில், கொள்ளை முயற்சியின் போது தான் சயீப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும். குற்றவாளி பிடிபட்ட நிலையில் சயீப் அலிகான் வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்