தமிழக பக்தர்கள் வருகை குறைவால் சபரிமலையில் கூட்டம் இல்லை
|வாரத்தின் இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. நேற்றைய தினம் இரவு 9 மணி நிலவரப்படி 63,242 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,124 பேர் வந்துள்ளனர்.
இந்தநிலையில் சபரி மலையில் இன்றும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டபோது, வலிய நடைப் பந்தலில் 5 வரிசையில் மட்டும் பக்தர்கள் வரிசையில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு வலிய நடைப்பந்தலில் பக்தர்கள் காத்து நிற்காமல் பதினெட்டாம் படி ஏறிச் சென்றனர். தமிழக பக்தர்கள் குறைவான அளவில் வருவதே சபரிமலையில் கூட்டம் இல்லாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது.