உத்தர பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து: 4 டாக்டர்கள் பலி
|லக்னோவில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பும்போது விபத்தில் பலியாகி உள்ளனர்.
கன்னாஜ்:
உத்தர பிரதேசத்தில் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலையில் சொகுசு கார் விபத்துக்குள்ளானது. லக்னோவில் இருந்து எட்டாவா மாவட்டம் சாய்பாய் நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்த அந்த கார், கன்னாஜ் மாவட்ட எல்லையில் வந்தபோது சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி மறுபக்கம் பாய்ந்துள்ளது. பின்னர் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில், கார் கடுமையாக சேதமடைந்தது. காரில் இருந்த 4 டாக்டர்கள், ஒரு லேப் டெக்னீசியன் என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கன்னாஜ் மாவட்டம் திர்வா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் சாய்பாய் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியவர்கள். லக்னோவில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பும்போது விபத்தில் பலியாகி உள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.