'ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாடு; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
|ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று(09.12.2024)தொடங்கி வைக்கிறார்.
புது டெல்லி,
ஜெய்ப்பூரில் 2024-'ரைசிங் ராஜஸ்தான் உலகளாவிய முதலீட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று(09.12.2024) தொடங்கி வைக்கிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (JECC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுக் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பிரதமர் மோடி தினசரி அட்டவணைப்படி, இன்று(09.12.2024) காலை ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்து ஜெய்ப்பூர் கண்காட்சி மையத்திற்கு வந்தவுடன், உச்சிமாநாட்டை துவக்கி வைக்கவுள்ளார் . பின் பிரதமர் தொடக்க மண்டபத்திற்கு (ஹால்-ஏ) செல்வார், அங்கு அவருக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் ஷர்மா நினைவு பரிசு வழங்குவார்.
பின்னர் பிரதமர் மோடியை குழந்தைகள் பாடகர் குழுவினர் வரவேற்கவுள்ளனர். வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரைசிங் ராஜஸ்தான் திரைப்படம் திரையிடப்படுவதைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் மத்தியில் முதல்-மந்திரி பஜன்லால் ஷர்மா உரையாற்றுவார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஹரியானாவில் உள்ள பானிபட் நகருக்குச் செல்கிறார், அங்கு அவர் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) மூலம் பீமா சாகி யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, 18 முதல் 70 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, எல்.ஐ.சி., முகவர்களாக மாற, பயிற்சி அளிக்கப்படும். நிதி கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை முடித்த பிறகு, இந்தப் பெண்கள் எல்ஐசி டெவலப்மென்ட் ஆபீஸர் பதவிகளுக்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
பானிபட்டில், கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.