ஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்
|ஆசிரியரின் நாற்காலியின் கீழ் மாணவர்கள் வெடிகுண்டு வைத்து ரிமோட் மூலம் இயக்கி வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிவானி,
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஆசிரியரின் நாற்காலியின் கீழ் பட்டாசு போன்ற வெடிகுண்டை வைத்து ரிமோட் மூலம் இயக்கி வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் அறிவியல் பாடம் எடுக்கும் பெண் ஆசிரியர் ஒருவர் 12-ம் வகுப்பு மாணவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆசிரியரை பழிவாங்க நினைத்த மாணவர்கள் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த வெடிகுண்டை ஆசிரியரின் நாற்காலியின் கீழ் வைத்துள்ளனர்.
ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்ததும் வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார். விசாரணையில் வகுப்பில் உள்ள 15 மாணவர்களில் 13 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த 13 மாணவர்களை அரியானா கல்வித் துறை ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.