மக்களவையில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் - எதிர்க்கட்சிகள் அமளி
|மக்களவையில் எமர்ஜென்சிக்கு எதிரான தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரான ஓம் பிர்லா 297 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான கே.சுரேஷ் 232 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஓம் பிர்லா வெற்றி பெற்று, 2-வது முறை மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஓம் பிர்லா, கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சிக்கு எதிராக, மக்களவையில் இன்று தீர்மானத்தை வாசித்தார். அந்த தீர்மானத்தில், "இந்தியாவில் எமர்ஜென்சியை அமல்படுத்திய முடிவை இந்த மக்களவை கடுமையாக கண்டிக்கிறது. எமர்ஜென்சியை எதிர்த்து போராடி, இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடமையை நிறைவேற்றிய அனைத்து மக்களின் உறுதியையும் பாராட்டுகிறோம்.
ஜூன் 25, 1975 இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு கருப்பு அத்தியாயமாக அறியப்படும். இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தி, அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை தாக்குதலுக்கு உள்ளாக்கினார். ஜனநாயகத்தின் தாயகமாக இந்தியா அறியப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயக விழுமியங்கள் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. விவாதங்களும் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட இந்தியாவில் இந்திரா காந்தி சர்வாதிகாரத்தை திணித்தார். இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டன, கருத்து சுதந்திரம் ஒடுக்கப்பட்டது. இந்திய குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ஒட்டுமொத்த தேசமே சிறைச்சாலையாக மாறியது. அப்போதைய சர்வாதிகார அரசாங்கம் ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. நீதித்துறையின் சுயாட்சி மீதும் கட்டுப்பாடு இருந்தது" என்று தெரிவித்தார்.