ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு
|கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். ஓய்வுபெற்ற தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
நீட்டிக்கப்பட்ட அந்த பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், அவருக்கு மீண்டும் ஒரு முறை அதாவது 2-வது தடவையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது. ஆனாலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.
ஜார்கண்ட் மற்றும் மராட்டியத்தில் இன்று (புதன்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.