
கர்நாடகத்தில் அரசு திட்ட ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு- சித்தராமையா அறிவிப்பு

அரசு திட்ட ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
முதல்-மந்திரி சித்தராமையா கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் அரசு திட்ட பணி ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசுகையில், "கா்நாடக பொது கொள்முதலில் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் தலித் மற்றும் பழங்குடியினருக்கு அரசு திட்ட பணி ஒப்பந்தங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதில் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு இந்த திட்ட பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ரூ.2 கோடி வரையிரான பணிகளில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும். முஸ்லிம்கள் மட்டுமின்றி இட ஒதுக்கீட்டு பட்டியலில் 1ஏ பிரிவில் சமூகங்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும். அதே போல் அரசு துறைகளுக்கான சரக்குகள் கொள்முதலிலும் மேற்கண்ட சமூகங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது" என்றார்.
அரசு திட்ட ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது முஸ்லிம் பட்ஜெட், ஹலால் பட்ஜெட் என்று கடுமையாக அக்கட்சி தலைவர்கள் விமா்சித்துள்ளனர்.