நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி கோரிக்கை நிராகரிப்பு
|நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி சபாநாயகருக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. செங்கோல் முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் சபாநாயகர் அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது, நிராகரிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.