ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
|நாட்டுக்கும், சமூகத்திற்கும் ஈடுபாட்டுடன் செயல்பட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை நாம் இழந்து விட்டோம் என மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மும்பை,
பழம்பெரும் இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மந்திரி சபை இன்று கூடியது. இந்த கூட்டத்தில், மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், தொழில்முனைவு என்பது சமூக வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வழியாகும். புதிய வர்த்தகங்களை உருவாக்குவதன் வழியே வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதையில் நாட்டை எடுத்து செல்ல முடியும்.
நாட்டுக்கும், சமூகத்திற்கும் ஈடுபாட்டுடன் செயல்பட்ட தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை நாம் இழந்து விட்டோம். தொழில்துறை மற்றும் சமூக மேம்பாட்டில் டாடாவின் பங்கு ஈடுஇணையற்றது. உயர்ந்த நன்னெறிகள், வெளிப்படை தன்மை மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய தூய்மையான வணிக மேலாண்மை ஆகியவற்றுடன் அனைத்து சவால்களையும் அவர் எதிர்கொண்டார் என அந்த தீர்மானம் தெரிவிக்கின்றது.
உலக அரங்கில் அவர், டாடா குழுமத்திற்கும் மற்றும் இந்தியாவுக்கும் தனிஇடம் ஒன்றை உருவாக்கியவர் என்றும் அந்த தீர்மானம் தெரிவிக்கின்றது. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்பு உறுதியான முடிவுகளை மேற்கொண்டதற்காக எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார். கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,500 கோடி நன்கொடை வழங்கியவர்.
டாடா குழுமத்தின் அனைத்து ஓட்டல்களிலும், கொரோனா நோயாளிகள் தங்கும் வகையிலான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார் என அந்த தீர்மானம் தெரிவிக்கின்றது. 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல் மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது, டாடா குழும நிறுவனத்தின் தாஜ் மகால் ஓட்டலும் இலக்காகி பெரிதும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த கூட்டத்தில், மராட்டிய மக்களின் சார்பில் டாடாவுக்கு மந்திரி சபை அஞ்சலி செலுத்துகிறது. இந்த வேதனையான தருணத்தில் டாடா குழுமத்துடன் நாங்கள் துணையாக இருக்கிறோம் என்றும் அந்த தீர்மானம் தெரிவிக்கின்றது. ரத்தன் டாடாவுக்கு 2008-ம் ஆண்டில் இந்தியாவின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.