< Back
தேசிய செய்திகள்
ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை.. பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்கு
தேசிய செய்திகள்

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை.. பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்கு

தினத்தந்தி
|
10 Oct 2024 5:53 PM IST

ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அரசு சார்பில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மும்பை:

பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (வயது 86) மும்பையில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரத்தன் டாடாவின் உடல் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு, மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள தேசிய கலை மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு மக்கள் சாரை சாரையாக வந்து ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தினர். டாடா குழுமத்தின் நிர்வாகிகள், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மாலையில் ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ரத்தன் டாடாவின் உடல் மும்பை ஒர்லியில் உள்ள பார்சி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்குள்ள பிரார்த்தனை மையத்தில் உடல் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய அரசு சார்பில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மத்திய மந்திரி பியூஷ் கோயல், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ரத்தன் டாடாவின் உடலுக்கு மராட்டிய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின்னர், ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்