31 ஆண்டுகளாக பலாத்காரம்... 73 வயது நபருக்கு எதிராக வழக்கு; அதிரடி தீர்ப்பு
|31 ஆண்டுகளில், தொடர்பை துண்டித்து விட்டு, முதியவருக்கு எதிராக பலாத்கார புகார் அளிக்க அந்த பெண்ணுக்கு பல வாய்ப்புகள் இருந்தன என்று கோர்ட்டு குறிப்பிட்டது.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டில் 73 வயது நபருக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின்படி, புகார் அளித்த பெண் அந்த முதியவரின் நிறுவனத்தில்1987-ல் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அப்போது, முதியவர் கட்டாயப்படுத்தி, அந்த பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதன்பின்னர், 1987 ஜூலை முதல் 2017 வரை 30 ஆண்டுகளாக கல்யாண், பிவண்டி மற்றும் பிற இடங்களில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்.
1993-ம் ஆண்டில், அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்த அந்த முதியவர், பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி விட்டு, என்னுடைய 2-வது மனைவி நீ என கூறியுள்ளார். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள அந்த பெண்ணை அனுமதிக்கவில்லை என்றும் புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
1996-ம் ஆண்டில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், நிறுவன பொறுப்பை அந்த பெண் கவனித்து வந்திருக்கிறார். 2017-ம் ஆண்டு செப்டம்பரில் வேலையை விட்டு, விட்டு விடுமுறை எடுத்து செல்ல வேண்டிய நிலை அந்த பெண்ணுக்கு ஏற்பட்டு உள்ளது. அவர் மீண்டும் பணிக்கு திரும்ப வந்தபோது, அலுவலகம் மூடப்பட்டு இருக்கிறது.
அந்த பெண் முதியவரை தொடர்பு கொண்டபோது, அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன், வங்கி, வருமான வரி உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய ஆவணங்களையும் தர மறுத்திருக்கிறார். திருமணம் செய்ய முடியாது என மறுத்திருக்கிறார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ். கட்காரி மற்றும் நீலா கோகலே முன் விசாரணைக்கு வந்தது. எப்.ஐ.ஆர். பதிவில் இது ஒரு கருத்தொருமித்த உறவு என தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
2018-ம் ஆண்டில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. காலதாமதத்திற்கான விளக்கம் இல்லை. 31 ஆண்டுகளாக பாலியல் உறவில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது பற்றி புகார்தாரர் எந்த விசயமும் குறிப்பிடவில்லை.
இருவருக்கும் இடையேயான உறவு கசந்ததும், போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முதியவருக்கு திருமணம் ஆகிவிட்டது என பெண்ணுக்கு தெரிந்திருக்கிறது என எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது. எனினும், திருமண வாக்குறுதியை அந்த பெண் தொடர்ந்து நம்பி வந்திருக்கிறார்.
2-வது திருமணத்திற்கு சட்டம் அனுமதிக்காது என தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு அந்த பெண் முதிர்ச்சி அடைந்தவர். தவிரவும், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, திருமணம் செய்து கொள்கிறேன் என முதியவர் வாக்குறுதி அளித்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகளே புகாரில் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 31 ஆண்டுகளாக, தொடர்பை துண்டித்து விட்டு, முதியவருக்கு எதிராக புகார் அளிக்க அந்த பெண்ணுக்கு பல வாய்ப்புகள் இருந்தன என்றும் கோர்ட்டு குறிப்பிட்டது. முதியவருக்கு எதிரான புகாரை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.