தேசிய செய்திகள்
பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி
தேசிய செய்திகள்

பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி

தினத்தந்தி
|
31 May 2024 5:22 PM IST

வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பியதும் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை எஸ்.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா (வயது33). இவர் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். பிரஜ்வல் ரேவண்ணா, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஹாசன் தொகுதியில் களத்தில் உள்ளார். அவரது தொகுதியில் கடந்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல் நடைபெறுதற்கு சில நாட்களுக்கு முன்பு ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் வெளியானது. அதில் அவர் தொடர்பான சுமார் 2 ஆயிரத்து 900 ஆபாச வீடியோக்கள் இருந்தன. இந்த பென் டிரைவ்கள் ஹாசனில் பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஹாசனில் தேர்தல் நடந்து முடிந்த கையோடு மறுநாள் 27-ந் தேதி யாருக்கும் தெரியாமல் பிரஜ்வல் ரேவண்ணா விமானம் மூலம் ஜெர்மனிக்கு சென்றார். அவரது ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சர்வதேச ஊடகங்களிலும் இதுபற்றிய செய்திகள் வெளியானது. நாடாளுமன்ற தேர்தல் பிரசார களத்தில் இந்த விவகாரம் தீவிரமாக எதிரொலித்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து உத்தரவிட்டது. பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் மீது 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எஸ்.ஐ.டி. போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். 7 நாட்கள் காலஅவகாசம் கோரிய அவர் அதன் பிறகு நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. கோர்ட்டு மூலம் கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் 31-ந் தேதி பெங்களூருவுக்கு வந்து போலீசாரிடம் சரண் அடைவதாக வீடியோ மூலம் அவர் அறிவித்தார். அதன்படி ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு 'லுப்தான்சா' விமானத்தில் புறப்பட்டார். சுமார் 9 மணி நேரம் பயணித்து நள்ளிரவு சுமார் 12.50 மணிக்கு அவர் வந்த விமானம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

விமான நிலையம் வந்ததும் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

மேலும் செய்திகள்