100 ஆண்டு பழமையான கொதிகலன் சட்டம் ரத்து.. புதிய சட்டத்திற்கு மாநிலங்களவை ஒப்புதல்
|ஏழு குற்றங்களை குற்றமற்றதாக ஆக்குவதையும், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாக கொண்டது புதிய மசோதா.
புதுடெல்லி:
கொதிகலன்கள் வெடிப்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கொதிகலன் சட்டம்-1923 உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. கொதிகலன்கள் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு கடுமையான விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இந்த விதிமுறைகளுக்கு இணங்க தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் அல்லது தடை விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
100 ஆண்டு பழமையான இந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு, தற்போதைய வணிக சூழல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 'கொதிகலன் சட்ட மசோதா-2024' உருவாக்கப்பட்டது. இந்த புதிய மசோதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 8-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
7 குற்றங்களை குற்றமற்றதாக ஆக்குவதையும், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கொதிகலன்களை ஒழுங்குபடுத்துதல், கொதிகலனில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. கொதிகலன்களை பழுதுபார்க்கும் பணி தகுதியான மற்றும் திறமையான நபர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் உள்ளது.